திருநங்கைகள் கொண்டாடும் சமயபுரம் மாரியம்மன் திருவிழா துவக்கம்
குமாரபாளையத்தில் திருநங்கைகள் சார்பில் சமயபுரம் மாரியம்மன் திருவிழா துவங்கியது.;
குமாரபாளையத்தில் திருநங்கைகள் சார்பில் நடைபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலத்தில் திருநங்கைகள் தீர்தக்குடங்கள் எடுத்தவாறும், நவசக்தி, மாகாளி அம்மன் வேடங்கள் போட்டவாறும் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் திருநங்கைகள் சார்பில் சமயபுரம் மாரியம்மன் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். 14ம் ஆண்டிற்கான விழா கூழ் வார்தல் மற்றும் அன்னதான விழா நேற்று காலை கணபதி ஹோமம், நவதான்ய பச்சை கம்பம் நடுதல், அம்மனுக்கு பூச்சாட்டி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
நேற்று இரவு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேளதாளங்களுடன் நடைபெற்றது. இதில் நவசக்தி வேடம், மாகாளி வேடமணிந்தவாறும், கரகாட்டத்துடனும், வாண வேடிக்கையுடனும் நடைபெற்றது.
இதில் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரித்த ரதத்தில் சமயபுரம் மாரியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். இன்று மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அபிஷேக, ஆராதனைகள், புஷ்பாஞ்சலி ஆகியன நடைபெறவுள்ளன.
இரவு மகா தீபாராதனையும், தெருக்கூத்தும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மாதம்மாள் மற்றும் திருநங்கைகள் குழுவினர் செய்திருந்தனர்.