குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் நோய் தொற்று பரவல் அபாயம்
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பால் தகராறுகளும் அதிகரித்து வருகின்றன.;
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பதுடன் தகராறுகளும் அதிகரித்து வருகின்றன.
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் யாசகம் பெறுபவர்கள், ஆதரவற்றவர்கள், மற்றும் அச்சு பிணைக்கும் தொழிலாளர்கள் என பல தரப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் முகக் கவசம் அணிவதோ, கிருமிநாசினி மருந்து தெளித்துக்கொள்வதோ, சமூக இடைவெளி பின்பற்றுவதோ கிடையாது.
எனவே, இவர்களால் கொரோனா போன்ற தொற்று நோய்கள் பரவ காரணமாகவும் அமைந்து வருகிறது. கடந்த மூன்று நாட்கள் முன்பு இவர்களில் ஒருவர் பேருந்து நிலையத்தின் சைக்கிள் ஸ்டாண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதேபோல் சில நாட்களுக்கு முன், ஒரு பெண்ணும், ஒரு முதியவரும் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்தார்கள். வெளியூர்களில் இருந்து இவர்களை இங்கு கொண்டு வந்து அனாதையாக விட்டுச் செல்கின்றனர். பின்னர் யாசகம் பெற்று வாழ்வதுடன், பலர் பசியால் இறக்கும் நிலையும் ஏற்படுகிறது.
பேருந்து நிலையத்தில் விடப்படும் ஆதரவற்றவர்கள், குளிக்காமலும், சாப்பிட்ட பின் எச்சில் இலைகளை அங்கேயே போட்டு செல்வது, சிறுநீர் மற்றும் இயற்கை உபாதைகளை படுக்கும் இடத்திலேயே செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதே வளாகத்தில் அச்சு பிணைக்கும் தொழிலாளர்களும் கூடி வருகிறார்கள். மது போதையில் இவர்கள் அடிக்கடி வாய்த்தகராறு, கைகலப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நாளுக்குநாள் பேருந்து நிலையத்தில் இதுபோன்ற கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பல குற்றவாளிகள் இங்கு தங்க வசதியாகவும் உள்ளது.
ஆகவே பஸ் ஸ்டாண்டில் இது போன்ற நபர்கள் தங்கவும், கூடவும் அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.