கவுரி தியேட்டர் பஸ் நிறுத்த பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
குமாரபாளையம் கவுரி தியேட்டர் பஸ் நிறுத்த பகுதியில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குமாரபாளையம் கவுரி தியேட்டர் பஸ் நிறுத்த பகுதி.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கவுரி தியேட்டர் பஸ் நிறுத்த பகுதியில் 5 சாலைகள் சந்திக்கிறது. இதில் எந்தவொரு சாலையிலும் வேகத்தடை இல்லை. இதனால் அதிவேகமாக வரும் வாகனங்கள் இந்த பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி பலரும் காயமடைந்து வருகின்றனர்.
இந்த இடத்தில் ரவுண்டான அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், வேகத்தடைகள் அமைத்து விபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள்
குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகம் நடைபெறும். இந்த சாலைகளின் ஓரங்களில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. சாலையின் நடுவில் டிவைடர் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே சாலை குறுகியதாக உள்ளது. அதில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றால் டூவீலர்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சாலையோரங்களில் வாடிக்கையாளர்களின் கார்கள், கடைகளுக்கு சரக்கு கொண்டுவரும் டெம்போக்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சரக்கு வாகனங்கள் நகர் எல்லைக்குள் வந்து செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். இதேபோல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு
குமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம், மங்களம், வேலூர் செல்லும் சாலையில் கவுண்டம்பாளையம் மற்றும் கோனேரிமேடு பகுதிகளில் அமைக்கப்பட்ட பாலம், மற்றும் சின்னியம்பாளையம், பிரிதி செல்லும் சாலையில் கருக்கம்பாளையம் பகுதியில் கிணற்றுக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு சுவர் ஆகிய பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
அப்போது மழைக்காலங்களில் சாலை பராமரிப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் சந்திரசேகர், உதவி கோட்ட பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர் சையது ராசிம் உள்பட பலர் பங்கேற்றனர்.
கத்தேரி பிரிவில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் விபத்து உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டதால் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் தற்போது மேம்பாலம் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இதேபோல் அதிக வாகனங்கள் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு உள்ளது.
தட்டான்குட்டை ஊராட்சி, சத்யா நகர், வேமன்காட்டுவலசு, எம்.ஜி.ஆர். நகர் , குமாரபாளையம் நகரம், பவானி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த கத்தேரி பிரிவில்தான் சாலையை கடந்து செல்கிறது. அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் என கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும் இந்த சாலையை கடந்துதான் சென்றாக வேண்டும். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு பல விபத்துக்கள் நடந்து பல குடும்பங்கள் தவித்து வரும் நிலையும் உண்டு. இதனை தவிர்க்க இங்கு மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்துக்கு காரணமாகும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குமாரபாளையம் சேலம் சாலையில் நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் அரசு பஸ் மோதி பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதையொட்டி நடைபாதை ஆக்கிரமிப்பு செய்தவர்களின் வாகனங்கள், போர்டுகள் ஆகியவை நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறபடுத்தி எச்சரித்து வந்தனர். இனி நடைபாதை ஆக்கிரமிப்பு செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யபடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விபத்துக்கள் குறைய வேகத்தடை அமைக்க சேர்மன் ஆய்வு
குமாரபாளையம் சேலம் சாலையில் நேற்றுமுன்தினம் கல்லூரி மாணவர் டூவீலர் மோதி முதியவர் உயிரிழந்தார். அதே நாளில் கவுரி தியேட்டர் பகுதியில் இரு டூவீலர்கள் மோதிய விபத்தில் இரு பெண்கள் ஆபத்தான நிலையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு பலரும் பாதிக்கபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க சேலம் சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி வேகத்தடை அமைக்க நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து விஜய்கண்ணன் கூறுகையில், விபத்துகளை தடுக்க சில இடங்களில் வேகத்தடை அமைக்க மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆகியோருக்கு கோரிக்கை வைத்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலை கான்கிரீட் தளமாக மாற்ற கோரிக்கை
குமாரபாளையத்திலிருந்து பவானி செல்லும் பஸ்கள், லாரிகள், டெம்போக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சேலம் கோவை புறவழிச்சாலை, கவுரி தியேட்டர் பின்புறம் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் வந்து, புறவழிச்சாலை இணைப்பு சாலை வழியாக செல்கின்றன. இந்த வளைவில் மண் சாலையாக உள்ளது.
தற்போது மழை காலமாக உள்ளதால், மழை வரும் போது சேறும் சகதியுமாக மாறி டூவீலர்கள் இந்த வளைவில் செல்ல முடியாத நிலை உருவாகிறது. பல வாகனங்கள் சேற்றில் சிக்கி சறுக்கி கீழே விழும் நிலையும் உருவாகி, பலர் காயமடையும் நிலை உருவாகி வருகிறது. வேகமாக சென்றுதான் இந்த இடத்தில் வாகனங்கள் திரும்ப முடியும். முன்னால் செல்பவர்கள் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டால் பின்னால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த வளைவில் கான்கிரீட் தளம் அல்லது தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.