தடுப்பூசி முகாம் முடிந்தபின் இடத்தை தூய்மைபடுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
குமாரபாளையத்தில் தடுப்பூசி முகாம் நடந்து முடிந்த பின் இடத்தை தூய்மை படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தடுப்பூசி முகாம் (பைல் படம்)
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம், போலியோ தடுப்பூசி முகாம் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. பச்சிளம் குழந்தைகள் அமர்ந்து பாடம் கற்றுக்கொள்ளும் அங்கன்வாடி மையங்களில் கூட இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் யார் யார் வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. முகாம் முடிந்ததும், கதவை பூட்டி விட்டு சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் அவரவர் வீட்டுக்கு சென்று விடுவார்கள். மறுநாள் அதே இடத்தில் பச்சிளம் குழந்தைகள் பாடம் பயில வருவார்கள்.
முகாமிற்கு நோய் தொற்று இருப்பவர்கள் வந்திருந்தால் இந்த குழந்தைகளை கொரோனா நோய் தாக்கும் அபாயம் ஏற்படும். ஆகவே முகாம் நடக்கும் அனைத்து இடங்களிலும் முகாம் முடிந்த உடனே, தூய்மை படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளித்து நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.