கத்தேரி பிரிவில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை
குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.;
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் விபத்து உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டதால் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் தற்போது மேம்பாலம் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இதேபோல் அதிக வாகனங்கள் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு உள்ளது. தட்டான்குட்டை ஊராட்சி, சத்யா நகர், வேமன்காட்டுவலசு, எம்.ஜி.ஆர். நகர், குமாரபாளையம் நகரம், பவானி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த கத்தேரி பிரிவில்தான் சாலையை கடந்து செல்கிறது.
அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் என கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும் இந்த சாலையை கடந்துதான் சென்றாக வேண்டும். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு பல விபத்துக்கள் நடந்து பல குடும்பங்கள் தவித்து வரும் நிலையும் உண்டு. இதனை தவிர்க்க இங்கு மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.