குமாரபாளையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள் அகற்றம்
குமாரபாளையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.;
குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலையில், பள்ளிபாளையம் சாலை மேம்பாலம் கீழ் அமைக்கப்பட்டிருந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன.
குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை, பள்ளிபாளையம் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடி காய்கறி, பழக்கடைகள் உள்ளிட்ட பல கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. பொருட்கள் வாங்க வருபவர்கள் வழியில் வாகனங்களை நிறுத்தி விட்டு வாங்குகின்றனர்.
இதனால், வாகனங்கள் செல்லும் வழியில் விபத்து அபாயம் ஏற்படும் சூழ்நிலையில் சென்று வருகின்றனர். இதனை தடுக்க ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி நடைபாதையில் பொதுமக்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தாசில்தார் தமிழரசியின் உத்திரவுப்படி வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமலதா, எஸ்.ஐ. வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று கடைகளை அகற்றினர்.