குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

குமாரபாளையம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் நேரு, மதிவேந்தன் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினர்.

Update: 2022-08-06 11:30 GMT

குமாரபாளையம் வெள்ள பாதிப்பு மக்களுக்கு அமைச்சர்கள் நேரு, மதிவேந்தன் நிவாரண உதவிகள் வழங்கினர்.

காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இவர்களை பார்த்து ஆறுதல் சொல்லவும், நிவாரண உதவிகள் வழங்கவும் அமைச்சர்கள் நேரு, மதிவேந்தன் குமாரபாளையம் வந்தனர்.

கத்தேரி பிரிவு அருகே கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மணிமேகலை தெரு, பாலக்கரை, அண்ணா நகர், கலைமகள் வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்து, வாசவி மகால், நடராஜா மண்டபம், ராஜேஸ்வரி மண்டபம், செங்குந்தர் மண்டபம் ஆகிய பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவிகளை அமைச்சர் நேரு வழங்கினார்.

இவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாமக்கல் மாவட்டத்தில் 12 கேம்ப், 601 குடும்பம், ஆயிரத்து 795 பேர் இருக்கிறார்கள். 10 கிலோ அரிசி கொடுக்கப்பட்டுள்ளது. வேஷ்டி துணி மணி கொடுத்து இருக்காங்க. மருத்துவ சேவைகள் கொடுத்து உள்ளார்கள். நன்றாக கவனிப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

முதல்வர் உத்திரவின் பேரில் வந்துள்ளேன். முதல்வர் காவிரி கரையோர பகுதி மக்களிடம் இரவு 12 மணிக்கு கூட பேசி குறைகள் போக்கி வருகிறார். முதல்வரிடம் சொல்லி மாற்று இடம் குறித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும். மழையால் பாதிப்பு, ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எதிராகத்தான் பேசுவார். மாலையா போடுவார்? முதல்வர் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறார். திருச்சி பகுதியில் வாழை 600 ஏக்கர் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் வடிந்தால் சரியாகி விடும். பாதிப்பு ஏற்பட்டால் முதல்வரிடம் பேசி நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், டி.ஆர்.ஓ. மல்லிகா, ஆர்.டிஓ. இளவரசி, தாசில்தார் தமிழரசி, நகராட்சி கமிஷனர் விஜயகுமார் பொறியாளர் ராஜேந்திரன், மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி, நகர தி.மு.க. செயலர் செல்வம், துணை செயலர் ரவி, நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், தி.மு.க. கவுன்சிலர்கள் அழகேசன், கனகலட்சுமி, வேல்முருகன், ஜேம்ஸ், ரங்கநாதன், சத்தியசீலன், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிவாரண உதவி வழங்கியதில் சிலருக்கு ஆயிரமும், சிலருக்கு நான்காயிரமும் கொடுத்தால் பயனாளிகளிடையே சர்ச்சை நிலவியது.

Tags:    

Similar News