பதிவுத்தபால் ஏற்கும் நேரம் அதிகரிக்க கோரிக்கை..!
குமாரபாளையம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பதிவுத்தபால் ஏற்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.;
பதிவு தபால் ஏற்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என குறு சிறு தொழில் செய்பவர்கள், தொழில் அதிபர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுளளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட அமைப்பாளர் சித்ரா கூறியதாவது:
குமாரபாளையம் நகரில் விசைத்தறி, கைத்தறி, தானியங்கி தறிகள், இரண்டு விசைத்தறி பூங்காக்கள், 10க்கும் மேற்பட்டட கல்லூரிகள், 20க்கும் மேற்பட்ட பள்ளிகள், உள்பட எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஜவுளித்தொழிலில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு, அதன் பில்கள் மற்றும் இதர ஆவணங்கள் பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலமாக வட மாநிலங்களுக்கும், பல நாடுகளுக்கு அனுப்பும் வழக்கத்தை ஜவுளித்தொழில் நிறுவனத்தார் கொண்டுள்ளனர்.
இதே போல் கல்வி நிறுவனத்தார், பல முக்கிய தபால்களை அஞ்சல் அலுவலகம் மூலமாகத் தான் அனுப்பி வருகிறார்கள். எண்ணற்ற மாணவ, மாணவியர் தங்கள் தேர்வு ,மற்றும் சான்றிதழ்கள் சம்பந்தமான தபால்கள் அனுப்பி வருகிறார்கள். பெரும்பாலான அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி சம்பந்தமான தலைமை அலுவலத்திற்கு அனுப்புவதும் இதே அலுவலகத்தில்தான். மாவட்ட கலெக்டருக்கு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள தமிழக முதல்வர் தனிப்பிரிவு மற்றும் அமைச்சர்களுக்கு அனுப்பப்படும் தபால்களும் இந்த அலுவலகத்தில் பதிவு தபால் மூலமாக தான் பொதுமக்கள் அனுப்பி வருகிறார்கள்.
நகரின் மையப்பகுதியில் தலைமை அஞ்சல் அலுவலகம் இருக்கும் போது, தொழில் நிறுவனத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. தற்போது நகரை விட்டு வெகு தொலைவில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருவதால் அனைவருக்கும் இந்த அலுவலகம் சென்று வார மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. வழக்கமாக மாலை 04:00 மணி வரை இருந்த பதிவு அஞ்சல் நேரம், தற்போது மாலை 03:00 மணி வரை என மாற்றியுள்ளனர். இது பல தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இருந்த நேரத்தை மாற்றாமல், இன்னும் ஒரு மணி நேரம் அதிகப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் இந்த குமாரபாளையம் பகுதியில், ஒரு மணி நேரம் குறைத்து இருப்பது சரியானது அல்ல. தாலுக்கா அந்தஸ்து பெற்ற பவானியில் தினமும் மாலை 04:00 மணி வரை பதிவு அஞ்சல் பெறப்படுகிறது. அருகில் இருக்கும் ஈரோடு மாவட்டத்திற்கு ஒரு கால நிர்ணயம் , நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரு கால நிர்ணயம் என உள்ளதா?
மேலும் தற்போது காவிரியில் வெள்ளம் ஏற்பட்டதால், அனைவருக்கும் பவானி செல்ல எளிதான வழியான பழைய காவேரி பாலம், பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் கோவை புறவழிச்சாலை பாலம் அல்லது காவேரி நகர் புதிய காவேரி பாலம் என வெகு தொலைவு சுற்றி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினர் நன்மையை கருத்தில் கொண்டு, பதிவு அஞ்சல் கடிதங்கள் வாங்கும் நேரம் மாலை 04:00 மணி வரை நீட்டிக்க வேண்டும். மேலும் இந்த அலுவவலகம் நகரின் மையப்பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பல தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.