புறவழிச்சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் செல்வதில் சிரமம்..!
சேலம்-கோவை புறவழிச்சாலையில் நீர் தேங்கியதால்,வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
புறவழிச்சாலையில் மழைநீர் தேங்கியதால்,வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது.
குமாரபாளையம் அருகே சேலம்- கோவை புறவழிச்சாலை, கத்தேரி பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு வருகிறது. இந்த சாலை மிக குறுகியதாக இருப்பதால், அனைத்து வாகனங்களும் மெதுவாகத் தான் சென்று வருகின்றன.
இந்த பகுதியில் உள்ள டி மார்ட் வணிக வளாகம் அருகே சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, நீரை வடியச் செய்து, போக்குவரத்து சீராக நடந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் ஸ்டேஷன் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை
குமாரபாளையம் அருகே வேகத்தடை அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது:
குமாரபாளையத்தில் விசைத்தறி, கைத்தறி ஜவுளி உற்பத்தி, விசைத்தறி தயாரிப்பு, தானியங்கி தறிகள் தயாரிப்பு, நூல் உற்பத்தி மில்கள், சாயப்பட்டறைகள், ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு, கான்கிரீட் செங்கல், ஹாலோ பிரிக்ஸ், கான்கிரீட் கலவை தொழிற்சாலைகள், உள்ளிட்ட எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன.
உள்ளூர், வெளியூர்களிலிருந்து எண்ணற்ற தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு வந்து செல்கின்றனர். குமாரபாளையத்தில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவை உள்ளன. இவைகளில் சேலம், ஈரோடு, இடைப்பாடி, தேவூர், அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து மாணவ, மாணவியர் கல்வி பயில வந்து செல்கின்றனர். இதனால் சேலம், பள்ளிபாளையம், இடைப்பாடி, ஆனங்கூர் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும்.
ராஜம் தியேட்டர் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் முக்கியமான இடமான போலீஸ் ஸ்டேஷன் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வேகத்தடைகள் இல்லாததால், அடிக்கடி வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு, பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பஸ் ஸ்டாண்ட், இடைப்பாடி, பவானி, சேலம், திருச்செங்கோடு, தெற்கு காலனி, உடையார்பேட்டை, நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த போலீஸ் ஸ்டேஷன் நான்கு சாலை சந்திப்பை கடந்துதான் போக வேண்டும்.
ஆகவே விபத்துக்களை தவிர்க்கும் வகையில், இந்த இடத்தில் அனைத்து சாலைகளிலும் வேகத்தடை அமைத்து பொதுமக்களை விபத்திலிருந்து காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.