குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: தேவூர், தண்ணிதாசனூர் மக்கள் அவதி
தண்ணிதாசனூர் கிராமத்தில், 10க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வந்தது. இதேபோல், நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால், காவேரிப்பட்டி ஊராட்சி தண்ணிதாசனூரில், எடப்பாடி பகுதியில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலை நால்ரோடு பகுதியில், மழைநீர் தேங்கியது.
குறிப்பாக, சாலையோரம் தாழ்வான பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. தண்ணீர் இன்னும் வடியாத நிலையில், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதேபோல் தேவூர் அருகே அரசிராமணி செட்டிபட்டி, சென்றாயனூர், புள்ளாக்கவுண்டம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் விவசாய பயிர்களை மழைத் தண்ணீர் மூழ்கடித்து சென்றது.
அரசிராமணி, தேவூர் பகுதி சரபங்கா நதியில், காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நதியை ஒட்டி உள்ள விவசாய வயல்களில், தண்ணீர் சூழ்ந்தது மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்தது. தேவூர் அம்மாபாளையம் ஆதிதிராவிடர் தெருவில், முத்துபையன் என்பவருக்கு சொந்தமான மண் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. மழை பாதிப்புகளை, தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.