தனியார் மில்களின் கழிவுநீர் அகற்றக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
பள்ளிபாளையம் அருகே தனியார் மில்களின் கழிவுநீர் அகற்றக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.;
பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் பல்லவா, சந்தானலட்சுமி, ரோஹித், சேரன் ஆகிய நான்கு தனியார் மில்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதி விவசாய நிலங்களில் சேதப்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இதனை அகற்ற வேண்டி பலமுறை பொதுமக்கள் பல்வேறு போரட்டங்கள் நடத்தியும் பலனில்லை.
நேற்று காலை வெப்படை, பாதரை பகுதி பொதுமக்கள் இந்த மில்களின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ப.ஜ.க. விவசாய அணி செயலர் பாலுவும் இதில் பங்கேற்றார். இதன் பலனாக நேற்று மாலை மாவட்ட மாசுக்கட்டுபாட்டுவாரிய அலுவலர் செல்வகுமார் நேரில் வந்து, பொதுமக்கள் முன்னிலையில் நான்கு மில்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். வரும் டிச. 31ம் தேதிக்குள் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று அறிவுறித்தினார்.
இது பற்றி பொதுமக்கள் கூறியபோது, அதன் பின்பும் கழிவுநீர் அகற்றப்படாவிடில் எங்கள் போராட்டம் தீவிரமடையும் என்று கூறினர். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.