முந்தைய மாத மின் கணக்கீட்டு முறைக்கு குமாரபாளையம் மக்கள் எதிர்ப்பு

முந்தைய மாத மின்சார கணக்கீட்டு அடிப்படையில் கட்டணம் செலுத்தும் முடிவுக்கு, குமாரபாளையம் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.;

Update: 2021-11-13 05:30 GMT

அண்மையில், பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் வெளியிட்ட அறிக்கையில், குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில்,  நவ. 2021 மாத கணக்கீடு பணி செய்ய இயலாத காரணத்தினால்,  ஜே.கே.கே.நடராஜா நகரில் இரண்டாயிரத்து 505 மின் இணைப்புகள், சத்யாபுரியில்  824 இணைப்புகள், திருவள்ளுவர் வீதியில் 622 இணைப்புகள் என, அந்த பகிர்மானங்களில் உள்ள மின் நுகர்வோர், தங்களது முந்தைய மாத கணக்கீடு தொகையை செலுத்த அறிவுறுத்தப்படுவதாக கூறி இருந்தார்.

இத்தகைய அறிவிப்புக்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மாதத்தில் விசேஷம், தீபாவளி என இருந்ததால், அதிக நேரம் தொழிற்கூடங்கள் செயல்பட்டன; அத்துடன் பல்வேறு காரணங்களால் அதிக மின்சாரம் பயன்படுத்தி இருப்போம். இந்த மாதம், பண்டிகை விடுமுறை உள்ளிட்டவற்றால் மின்சாரம் குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, குறைவாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு, முந்தைய மாதத்தின் அதிகம் பயன்படுத்தியதற்கான மின் கட்டணத்தை  எப்படி செலுத்த முடியும்? மின்வாரிய அலுவலகத்தில் போதிய ஆட்களை நியமிக்காமல், மின் அளவினை கணக்கீடு முறையாக செய்யாதது மின்வாரிய அதிகாரிகளின் தவறு. இதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்ளா மாட்டோம் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News