'இன்ஸ்டாநியூஸ்' செய்தி எதிரொலி: பொது சுகாதாரநிலையம் மீண்டும் திறப்பு - மக்கள் நன்றி
‘இன்ஸ்டாநியூஸ்’ செய்தி எதிரொலியாக, பள்ளிப்பாளையம் அருகே, பொது சுகாதார நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு, இன்று 100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் அரசு துணை பொது சுகாதார நிலையம் உள்ளது. இது, நீண்ட மாதங்களாக பூட்டி கிடப்பதாகவும், சாதாரண நோய்க்கு கூட, தொலைதூர நகரப்பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாக, பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால், கர்ப்பிணி பெண்கள் பேறுகால பரிசோதனைகள் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். சுகாதார நிலையத்தில் ஊழியர்களை நியமித்து, கொரோனா தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பாக, நமது "இன்ஸ்டாநியூஸ்" இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நமது செய்தியின் எதிரொலியாக, மூடிக்கிடந்த புதுபாளையம் பொது சுகாதாரநிலையம் மீண்டும் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு இன்று, 100-நபர்களுக்கு கொரோனாவுக்காக கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. மீண்டும் பொதுசுகாதார நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு ஏற்படுத்தி தருவதாக, 'இன்ஸ்டாநியூஸ்' இணையதளத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.