குமாரபாளையத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டியவர் மீது வழக்குப்பதிவு
குமாரபாளையத்தில் அனுமதியின்றி 27 மரங்களை வெட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.
குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியில் அதிகாலை 27 மரங்கள் வெட்டப்பட்டிருப்பது கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி வி.ஏ.ஒ. முருகன் மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோரிடம் தகவல் தெரிவிக்க நேரில் வந்து விசாரணை செய்தனர்.
இதுகுறித்து வி.ஏ.ஓ. முருகன் கூறியதாவது:
குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியில் 27 மரங்கள் வெட்டப்பட்டதாக தகவல் கிடைத்தது. விசாரணை செய்ததில் குமாரபாளையத்தில் பஞ்சாபி தாபா ஓட்டல் நடத்தி வரும் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ள இடத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் கரைபகுதியில் அதிக மரங்கள் இருந்ததால், மர்ம நபர்கள் பலர் அடிக்கடி மரத்து நிழலில் மது அருந்தி விட்டு, காலி பாட்டில்களை தனது பட்டா நிலத்தில் வீசி வருவதால், அதனை தடுக்கும் வகையில் மலைவேம்பு மரங்கள் 18, வேப்ப மரங்கள் 9 ஆக மொத்தம் 27 மரங்கள் ஆள் வைத்து வெட்டியுள்ளார். இது குறித்து பொதுப்பணித்துறை அலுவரிடம் தகவல் தெரிவித்து, போலீசில் புகார் கொடுக்க சொல்லப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன், கோட்டைமேடு மாரியப்பன் 27 மரங்கள் வெட்டியதாக குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்ததின் அடிப்படையில், மாரியப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.