சுதந்திர தின விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
குமாரபாளையம் அரசு பள்ளியில் சுதந்திர தின பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
குமாரபாளையம் அரசு பள்ளியில் சுதந்திர தின விழா பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடைபெற்றது.
தளிர்விடும் பாரதம் அமைப்பின் சார்பில் சுதந்திர தினவிழாவையொட்டி அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி துவக்க பள்ளியில் அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
குமாரபாளையத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 130 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நடுவர்களாக சமூக சேவகர் சித்ரா, கதை சொல்லி சங்கீதா, என்.சி.சி. அலுவலர் அந்தோணிராஜ், ஓவியர்கள் குணா, ஜானவாஸ், ஆசிரியர்கள் நடராஜன், முத்தரிலு, தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள், வழங்கப்பட்டன.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் பேசியதாவது:-
மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க அவர்களது பெற்றோர்களும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், கதைகளின் மூலம் அவர்களுக்கு நீதி விளக்கங்களை அறிந்து கொள்ள செய்ய வேண்டும். மாணவர்கள் சிறுவயதில் இருந்து ஓவியத்தில் தங்களது தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஓவியம் மொழியின்றி பேசக்கூடிய ஒரு உன்னத கலை.
விடுமுறை நாட்கள் என்றும் பாராமல் மாணவ மாணவிகள் போட்டிகளில் உற்சாகத்தோடு கலந்து கொள்வது பாராட்டுக்குரியது, அதை ஊக்கமூட்டும் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.மாணவ மாணவிகள் படிப்பறிவு மட்டுமின்றி பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள இது போன்ற போட்டிகளில் பங்கேற்று தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
இறுதியாக அமைப்பின் செயலாளர் பிரபு நன்றி கூறினார்.