குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரி மினி பஸ் கவிழ்ந்து 19 பேர் காயம்
குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரி மினி பஸ் கவிழ்ந்து 19 பேர் காயமடைந்தனர்.;
சாலையோரத்தில் கவிழ்ந்த தனியார் கல்லூரி பஸ்.
குமாரபாளையம் பல்லக்காபாளையம் அருகே மங்கரங்கம்பாளையம் தனியார் கல்லூரியில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர், சங்ககிரி அருகே மரவம்பாளையத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 64.) இவர் கல்லூரியில் பணியாற்றும் 19 பணியாளர்களுடன் மினி பேருந்தில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே செல்லும் போது, சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதி மினி பேருந்து கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 19 நபர்களும் காயமடைந்தனர். இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
திருச்செங்கோடு, வட்டப்பரப்பு பகுதியில் வசிப்பவர் பாலகிருஷ்ணன், (வயது26.) ஐ.டி. நிறுவன பணியாளர். கோபியில் உள்ள திருமண தகவல் மையத்தில் தனது ஜாதகம் பதிவு செய்திட வேண்டி, இவரும், இவரது பெரியம்மா பாலாமணி,( 50, )ஆகிய இருவரும், ஹோண்டா வாகனத்தில் சென்று விட்டு, திரும்ப ஊருக்கு வரும் போது, குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் அம்மன் நகர் பிரிவு பகுதியில் வந்த போது, எதிரே வந்த டூவீலர் வேகமாக மோதி நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர், ஈரோடு செல்லும் வழியில் உள்ள ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த, கோபாலகிருஷ்ணன்,( 33,) என்ற கூலித்தொழிலாளியை கைது செய்தனர்.
குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வசிப்பவர் சதீஷ்குமார்,( 27.)இவரது மனைவி ஜெயலட்சுமி,( 23.) தனியார் நிறுவன பணியாளர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் திருமணம் நடந்தது. செப். 1ல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயலட்சுமி, இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சதீஷ்குமார், குமாரபாளையம் போலீசில் தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு வேண்டி புகார் மனு கொடுத்து உள்ளார். இவரது புகாரின்மீது குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் அன்பழகன்,( 39.) நிதி நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் காலை 11:00 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, வேமன்காட்டுவலசு பிரிவு சாலை அருகே, தனது பஜாஜ் டிஸ்கவர் டூவீலரில் அமர்ந்தபடி மொபைல் போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அதே வழியில் வேகமாக வந்த கார் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், கார் ஓட்டுனர் கோவையை சேர்ந்த மணிகண்டன், (24,) என்பவரை கைது செய்தனர்.
மேட்டூர் வட்டம், கொளத்தூரில் வசிப்பவர் விக்னேஷ்,( 23.) கிளீனர். இவரது உறவினர் துக்க வீட்டிற்கு பெருந்துறை வந்து விட்டு, மீண்டும் கொளத்தூர் செல்ல வேண்டி, ஹோண்டா சைன் டூவீலரை விக்னேஷ் ஓட்ட, இவரது உறவினர் மற்றும் நண்பர்களான, மகேஷ், 27, ராஜேஷ் (எ) சின்னு, 19, இருவரையும் பின்னால் உட்கார வைத்துகொண்டு சேலம் கோவை புறவழிச்சாலையில் வந்து கொண்டு இருந்தார். பல்லக்காபாளையம், கிணத்துபாளையம் அருகே வந்த போது, நிலைதடுமாறி டூவீலர் கீழே விழுந்ததில் மூவரும் பலத்த காயமடைந்தனர். மூவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையத்தில் தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்ட புகையிலை பொருட்கள் பல இடங்களில் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.எஸ்.ஐ. முருகேசன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சடையம்பாளையம் காந்தி நகர் பகுதியில் உள்ள மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. கையும் களவுமாக பிடிபட்ட கடையின் உரிமையாளர் ராமமூர்த்தி,( 43,) போலீசார் கைது செய்தனர்.