மெகா ஜவுளி பூங்கா, இலவச மின்சாரம்: அரசுக்கு விசைத்தறி சம்மேளன தலைவர் நன்றி

மெகா ஜவுளி பூங்கா , ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கிய மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மற்றும் மாநில விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் நன்றி தெரிவித்தார்

Update: 2023-03-20 11:15 GMT

விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் 

மெகா ஜவுளி பூங்கா , ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கிய மத்திய, மாநில அரசுக்கு குமாரபாளையத்தை சேர்ந்த தேசிய மற்றும் மாநில விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் நன்றி தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள விசைத்தறி கூடங்களுக்கு 750 யூனிட் வரை வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ஆயிரம் யூனிட்டாக உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் உத்திரவிட்டுள்ளார். இந்த அறிவிப்புகள் விசைத்தறி தொழிலுக்கு புதிய வழிகாட்டும். ஜவுளி தொழில் தற்போதுள்ள சூழலில் இப்படிப்பட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாகும்.

ஜவுளி தொழிலில் இந்தியா தான் முதன்மை நாடாக இருந்தது. தற்போது மற்ற நாடுகள் இந்தியாவை மிஞ்சிவிட்டன. இந்தியாவில் உற்பத்தியாகும் ஜவுளி பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு ஏற்கனவே பல ஜவுளி பூங்காக்கள் நாடு முழுதும் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உலகளாவிய ஜவுளி மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த விருதுநகர் மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளது.

இந்த ஜவுளி பூங்கா, இழையில் தொடங்கி ஆடை வரை அனைத்து ஜவுளி பொருட்களும் கிடைக்கும் வகையில் அமைய உள்ளது. இதில் விசைத்தறி தொழிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பூங்கா அமையவிருப்பதால் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. தமிழ்நாடுதான் இந்தியாவில் ஜவுளி தொழிலில் முதலிடம் வகிக்கிறது. தரமான ஜவுளி பொருட்களின் உற்பத்தியால் உலக அரங்கில் இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரிக்கும். ஜவுளி தொழில் வளர்ச்சி பெற இந்த ஜவுளி பூங்கா பெரும் உதவியாக இருக்கும் என்று  கூறினார்.

Tags:    

Similar News