குமாரபாளையத்தில் கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்த உரிமையாளர் கைது

குமாரபாளையத்தில் கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்ததால் உரிமையாளர் கைது செய்யபட்டார்.;

Update: 2023-09-15 15:45 GMT

குமாரபாளையத்தில் கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்ததால் உரிமையாளர் கைது செய்யபட்டார்.

கைத்தறியில் நெய்யக்கூடிய ரகங்களை, விசைத்தறியில் ஓட்டக்கூடாது என சில நாட்களுக்கு முன்பு, குமாரபாளையத்தில், திருச்செங்கோட்டை சேர்ந்த கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல்கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, விதி மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். நேற்று இவர் குமாரபாளையம் பகுதியில் ஆய்வு செய்த போது, எல்.வி.பி. சந்து பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி பட்டறையில், இரண்டு தறிகளில் கைத்தறி ரகங்கள் ஓடிக்கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ஜெயவேல்கணேசன், பட்டறை உரிமையாளர் மனோகரன்(வயது 69) என்பவரை கைது செய்யக்கோரி, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி, குமாரபாளையம் போலீசார் மனோகரனை கைது செய்தனர்.

குமாரபாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து கைத்தறி துறை உதவி அமலாக்க அலுவலர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கத்தில் தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் திருச்செங்கோடு, கைத்தறித்துறை உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல்கணேசன் பங்கேற்று கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து எடுத்துரைத்தார். ஜெயவேல்கணேசன் கூறியதாவது:

மத்திய அரசு கைத்தறி நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985ன் கீழ் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டைத்துணி, பிளாங்கெட் சால், உல்லன், ட்வீட் மற்றும் சந்தர் ஆகிய 11 ரகங்களும் விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை ஒருங்கிணைத்து உதவி அமலாக்க அலுவலர் தலைமையில் அமலாக்க பிரிவு அலுவலகம் ரெங்கசாமி பிள்ளை முதல் தெரு, தொண்டிகரடு, திருச்செங்கோடு என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யாமல் இருக்க, தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய ரகங்கள் சட்டத்திற்கு உட்பட்டதா? என உறுதி செய்து கொள்ளுங்கள். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News