பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

குமாரபாளையத்தில் பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-01-10 13:30 GMT

குமாரபாளையம் அடப்பு தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2020..2021ம் ஆண்டிற்கு 20 சதவீத போனஸ், கூலி உயர்வு கேட்டு ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் தாசில்தாருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அதன்படி முத்தரப்பு பேச்சுவார்த்தை தாசில்தார் தமிழரசி தலைமையில் சில நாட்கள் முன்பு நடைபெற்றது. ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர். கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு நெய்யும் விசைத்தறியாளர்கள் சங்கம், ஆகிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.

ஜன. 11ம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கொங்கு விசைத்தறி உரிமையாளர் சங்க கட்டிடத்தில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் உடன்பாடு ஏற்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இது பற்றி தொழிற்சங்க நிர்வாகி சுப்பிரமணி கூறியதாவது:

கடந்த வருடம் பேசிய போது 8.33 சதவீதம் தருவதாக ஒத்துகொள்ளப்பட்டது. தற்போது அதில் இருந்து அதிகபடுத்தி நாங்கள் கேட்ட 20 சதவீத போனஸ் தர முடிவு செய்யுங்கள் என்று கூறி வந்தோம். அவர்களும் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாக கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.

கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது:

தொழிற்சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் கேட்டனர். கொரோனா பாதிப்பால் அவ்வளவு தர முடியாது என்றும், கடந்த ஆண்டு பேசியது குறித்து நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவு செய்து கூறுகிறோம், என்று கூறினோம். தேதி குறிப்பிடப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

அடப்பு தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சுந்தராஜன், குமாரசாமி,பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சுப்ரமணி, நிர்வாகிகள் மாணிக்கம், வெங்கடேசன், உள்ளிட்ட பலர் வந்தனர்.

Tags:    

Similar News