குமாரபாளையம் அருகே போலீசார் கள்ளச்சாராய வேட்டை: முதியவர் கைது

குமாரபாளையத்தில் போலீசார் நடத்திய வேட்டையில் சாராய ஊறல் அழிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-11 15:21 GMT

கைது செய்யப்பட்ட ஈஸ்வரன்

குமாரபாளையத்தில் சாராய ஊறல் அழிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த இரு மாதங்களுக்கு முன் கள்ளச்சாராயம் குடித்த 23 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு சார்பில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டை நடத்தினர்.

பல மாவட்டங்களில் ஏராளமான கள்ளச்சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் இதுவரை ஆயிரக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாராய ஊறல் போடப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்தனர்.  குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டுவலசு பகுதி, உப்புக்குளம் கிராமத்தில் வசிப்பவர் ஈஸ்வரன் (வயது49.) விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில் சாராய ஊறல் போட்டு இருந்தார்.

இது பற்றி தகவலறிந்த திருச்செங்கோடு மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பெரியதம்பி தலைமையிலான போலீசார், நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் உப்புக்குளம் பகுதிக்கு வந்து சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். மேலும் இவர் வீட்டில் வைத்திருந்த ஒரு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஈஸ்வரனை கைது செய்து  கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின் அடிப்படையில் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News