இலங்கை மக்களுக்கு ஒரு மாத சம்பளத்தை கொடுத்து உதவிய போலீஸ் டி.எஸ்.பி.
இலங்கை மக்களுக்கு உதவ ஒரு மாத சம்பளத்தை போலீஸ் டி.எஸ்.பி. கொடுத்து உதவியுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. மக்கள் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு கூட இல்லாமல் பசி, பட்டினியோடு காத்திருக்கின்றனர். சிறு குழந்தைகள் குடிக்க பால் இன்றி தவித்து வருகிறது. இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக அரசு அலுவலர்கள் ஒரு நாள் ஊதியத்தை இலங்கை அரசுக்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்நிலையில், ஈரோடு மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சண்முகம் தன் மே மாத ஊதியமான 89,136.00 ரூபாயை இலங்கை மக்களுக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசுக்கு மாவட்ட போலீஸ் துறை மூலமாக அனுப்பி வைத்துள்ளார். இவர் குமாரபாளையம் இன்ஸ்பெக்டராகவும், திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாகவும் பணியாற்றி குமாரபாளையம் மக்களின் மனதில் இன்றும் அன்பின் உருவாக, ஏழைகளின் காவலனாக நிலை பெற்று இருப்பவர். சமீபத்தில் குமாரபாளையத்தில் நடந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை கூட இவர்தான் தொடங்கி வைத்தார்.