அரசு பள்ளிகளில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய போலீசார்
குமாரபாளையம் போலீசார் அரசு பள்ளிகளில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
சமீப காலமாக மாணவர்கள் போதை பொருட்களை உட்கொண்டு, ஆசிரியர்களை தகாத வார்த்தையால் பேசுவது, தாக்குவது, பள்ளியின் உடைமைகளை சேதப்படுத்துவது, அதே போல் மாணவிகள் பஸ்ஸில் பயணம் செய்யும் போது மது அருந்தியவாறு செல்வது, நடு ரோட்டில் போதையில் குத்தாட்டம் போடுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் போலீஸ் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படியும், மாவட்ட எஸ்.பி. உத்திரவின்படியும் குமாரபாளையம் போலீசார் சார்பில் , அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமை வகித்தார்.
இன்ஸ்பெக்டர் ரவி பேசுகையில், மாணவ, மாணவியர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரை மதிப்பது போல் ஆசிரியர், ஆசிரியைகளையும் மதிக்க வேண்டும், மாணவ, மாணவியர்களுக்கு போதை பழக்கம் கூடவே கூடாது. யாராவது போதை பொருள் விற்க வந்தால் உடனே பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் நபர்கள் குறித்து அச்சமில்லாமல் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உங்கள் பாதுகாப்புக்குதான் போலீஸ் உள்ளது. எதற்கும், யாருக்கும் அச்சம் கொள்வது வேண்டாம். பெற்றோரை, குருவாக உள்ள ஆசிரியர்களை மதித்து நடந்தாலே நீங்கள் வாழ்வில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
போதை பொருட்கள் உபயோகப்படுத்த மாட்டோம், சமூக விரோதிகள் கட்டும் தவறான பாதையில் செல்ல மாட்டோம் என மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தலைமை ஆசிரியர் ஆடலரசு, தலைமை ஆசிரியை சிவகாமி, எஸ்.ஐ.க்கள் மலர்விழி, நந்தகுமார், சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.