அரசு பள்ளி முன் வைக்கப்பட்ட பெட்டிக்கடை: திமுகவினர் புகாரால் அகற்றம்
குமாரபாளையத்தில், அரசு பள்ளிக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடை, தி.மு.க.வினரின் புகாரை தொடர்ந்து அகற்றப்பட்டது.;
குமாரபாளையம், மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளி முன்புறம், வகுப்பறை அருகே நேற்றுமுன்தினம், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பெயர் போடப்பட்டிருந்த பெட்டிகடை ஒன்று, இரவோடுஇரவாக வைக்கப்பட்டது. விடிந்ததும், பள்ளி முன்புறம் பெட்டிக்கடை இருப்பதை கண்டு, அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம், பள்ளியின் பி.டி.ஏ நிர்வாகி ரவி உள்ளிட்டோருக்கு தகவல் தர கொடுத்தார். அவர்களும் அங்கு நேரில் வந்து பார்த்து, உடனே பெட்டிக்கடையை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். ஆயினும், பெட்டிக்கடை அகற்றப்படவில்லை.
இதையடுத்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஒ., நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு, குமாரபாளையம் நகர தி.மு.க. சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்களிலும், இந்த செய்தி பரவியது. இதனிடையே, கோரிக்கையை ஏற்று, நேற்று அந்த பெட்டிகடை அங்கிருந்து அகற்றப்பட்டது. இதனை செயல்படுத்திய ஆர்.டி.ஒ. மற்றும் மாவட்ட கலெக்டருக்கு, தி.மு.க. சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.