வேகத்தடைக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கக்கோரி நகராட்சி கமிஷனரிடம் மனு
குமாரபாளையத்தில், வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கக்கோரி நகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.;
குமாரபாளையம் நகரில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, காந்திபுரம் சாலை, இடைப்பாடி சாலையில் காவேரி நகர் பஸ் நிறுத்தம் பகுதி, விட்டலபுரி பகுதி, ஐயன் தோட்டம், தம்மண்ணன் சாலை, நாராயண நகர், அம்மன் நகர், நடராஜா நகர், அம்மன் நகர், திருவள்ளுவர் வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை பெயிண்ட் அடிக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்களில் வருபவர்கள், வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் குமாரபாளையம் நகர மகளிரணி செயலர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா, ஜெயந்தி, தாமோதரன் உள்ளிட்டோர், நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம், இது தொடர்பாக மனு கொடுத்தனர். அதில், வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்து, விபத்தால் யாரும் பாதிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் சசிகலா தெரிவித்தார்.