குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் தி.க. சார்பில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவில் நகர தலைவர் சரவணன், தி.மு.க. நகர செயலாளர்கள் செல்வம், ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திராவிடர் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் சின்னப்பநாயக்கன்பாளையம் வாரச் சந்தை எதிரில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நகர தி.மு.க. செயலாளர்கள் செல்வம், ஞானசேகரன் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினர். மக்கள் நீதி மய்யம் நிர்வாகி சித்ரா, நிர்வாகிகள் காமராஜ், பத்மாவதி, தமிழ்செல்வன், எழிலரசன், ரம்யா, உள்பட பலர் பங்கேற்றனர்.
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவில், மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். நகர தலைவர் தண்டபாணி காவேரி நகர் புதிய பாலம் பிரிவு சாலையில் பெரியார் பொன்மொழி பலகையை திறந்து வைத்தார். காவேரி நகரிலிருந்து தொடங்கிய டூவீலர் பேரணி கத்தேரி சமத்துவபுரத்தில் நிறைவு பெற்றது. அங்குள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணிற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலர் சரவணன், அமைப்பாளர் முத்துப்பாண்டி, காப்பாளர் அண்ணாதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
பொதுத்துறை வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் கட்டாயம் இல்லை என அறிவித்து தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் செல்வம், ஞானசேகரன், ஜானகிராமன், சக்திவேல், கணேஷ்குமார், நீலகண்டன், சாமிநாதன், சுப்ரமணி, ஆறுமுகம், ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் நகர தலைவர் சரவணன் பேசியதாவது:
பொதுத்துறை வங்கி பணிகளில் எழுத்தராக சேர்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில மொழி தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் அது மாற்றம் செய்யப்பட்டது என்பது தெரியுமா? அதற்கான விளம்பரங்களில் பச்சையாக, மாநில மொழியில் தேர்ச்சி கட்டாயம் இல்லை, வெறும் முன்னுரிமை மட்டுமே என்று இடம் பெற்று இருப்பதை அறிவீர்களா? தமிழ்நாட்டு வங்கிகளில் ராஜஸ்தான், ஓடிஸா, போன்ற இதர மாநில இளைஞர்களை குவித்துக்கொண்டு உள்ளனர் என்பது தெரியுமா? 2022, 2023 ஆண்டுகளுக்கான வங்கி கிளார்க் பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு 843 பேர் தமிழ்நாட்டில் நியமனம் செய்யப்பட்டனர். மாநில மொழி தெரியாதவர்களுடன் தமிழ் மட்டுமே தெரிந்த வாடிக்கையாளர்கள் எப்படி உரையாடல் நடத்துவார்கள்?என்பது தெரியுமா? ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் ஹிந்திகாரர்கள் குவிந்து கொண்டுள்ளனர். பயணசீட்டு வாங்கும் இடத்தில் பணியாற்றுவோர், டிக்கெட் பரிசோதகர்களுக்கு தமிழ் தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.