பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்யலாமே
பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை பகுதியில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக, இட வசதி செய்து தர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு, தினந்தோறும் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பல்வேறு மருத்துவ தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக, தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருவதால், மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்கள், தட்டுப்பாடு காரணமாக விரைவாக டோக்கனை பெற வேண்டுமென்ற உந்துதலால், தங்களது இரு சக்கர வாகனத்தை முறைப்படுத்தி நிறுத்தாமல், வளாகத்தில் எல்லா இடங்களிலும் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால், அவசர சிகிச்சை பிரிவு, ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் மருத்துவமனைக்கு உள்ளே வாகனத்தை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தி, ஆம்புலன்ஸ் சென்று வர பாதையை ஏற்படுத்தி தர வேண்டும்; இருசக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் நிறுத்துவதற்கு ஏதுவான வசதிகளை செய்து தரவேண்டும்; அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.