பள்ளிபாளையம் அருகே பேப்பர் மில்லில் பாய்லரில் விழுந்து தொழிலாளி பலி
பள்ளிபாளையம், தனியார் பேப்பர் ஆலையில் வேலை செய்த ஊழியர் பாய்லரில் விழுந்து உயிரிழந்தார்.#;
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன்.திருமணமான இவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காவிரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பேப்பர் மில்லில் வேலை பார்த்து வருகிறார். மில்லின் குடியிருப்பு பகுதியில் தங்கி நிரந்தர பணியாளராக கடந்த 6வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் வேலைக்கு சென்ற கதிரேசன் இரவு பணி நிறைவடையும் நேரத்தில் கொதிகலன் மேல் உள்ள தடுப்பில் நின்று கொண்டு வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது தடுப்பு உடைந்து கொதிகலனில் தவறி விழுந்துள்ளார்.இதில் கதிரேசன் உடல் கருகி உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட கதிரேசன் உறவினர்கள் மற்றும் ஆலை தொழிலாளர்கள் பள்ளிபாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் பணியாளர் உயிரிழந்திருப்பதாக கூறுகின்றனர்.இதனால் ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.கொதிகலனில் விழுந்து ஊழியர் உயிரிழந்திருப்பது சக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.