பள்ளிபாளையம்: வாகனங்கள் முடக்கத்தால் மீண்டும் மாட்டு வண்டிகளுக்கு மவுசு!
வாகனங்கள் எதுவும் பெருமளவு இயக்கப்படாததால், பள்ளிபாளையம் பகுதி சாலைகளில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் மாட்டு வண்டிகளின் நடமாட்டத்தை காணமுடிகிறது.;
பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே, விசைத்தறி ஜவுளி நூல்களை மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்படுவதை படத்தில் காணலாம்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதி விசைத்தறிகள் அதிகளவில் உள்ளன. விசைத்தறி ஜவுளி ஏற்றுமதிக்கு பெரும்பாலும் டாட்டா ஏசி உள்ளிட்ட லோடு வாகனங்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் விசைத்தறிகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் விசைத்தறி ஜவுளிகள், நூல்கள் ஏற்றுமதி இறக்குமதி பணிகள் நடைபெற்று வருகின்றன. வாகனங்கள் பெருமளவு இயக்கப்படாததால் பள்ளிபாளையம் பகுதியில், தற்போது மீண்டும் பழைய முறைப்படி சாலைகளில் மாட்டு வண்டிகளின் நடமாட்டத்தை பார்க்க முடிகிரது.
பள்ளிபாளையத்தின் பல்வேறு இடங்களில் மாட்டுவண்டிகள் மூலமாக விசைத்தறி நூல்கள் ,ஜவுளிகள் கொண்டு செல்லப்படுவதை பொதுமக்கள், குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். அதேநேரத்தில் பள்ளிபாளையம் மிக அருகில் இருக்கக்கூடிய ஈரோடு ஜவுளி மார்கெட் பகுதியில், நான்கு சக்கர வாகனங்களை காட்டிலும் இன்றளவும் அதிகம் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்திய ஜவுளி ஏற்றுமதி,இறக்குமதி, நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.