பள்ளிபாளையம்: அருந்தமிழர் நிர்வாகி கொலை குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
பள்ளிபாளையத்தில், அருந்தமிழர் நிர்வாகி கொலை குறித்து விசாரிக்க, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த அருந்தமிழர் மாநில நிர்வாகி ரவி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து விசாரணை செய்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மறுத்தனர். அரசு உயர் அதிகாரிகள்,அருந்தமிழர் பேரவையின் நிர்வாகிகள் தோழமை அமைப்பினர் ஆகியோர் ரவியின் குடும்பத்தாரிடம் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என உறுதியளித்தனர்.
இதனை ரவியின் குடும்பத்தினர் ஏற்று கொண்டு உடலை பெற சம்மதித்தனர். நேற்று மாலை சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து ரவியின் உடல், பள்ளிபாளையம் காவேரி ஆறு ஆற்றங்கரையோரம் உள்ள பொது மயானத்தில், போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக, நான்கு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.