அருந்தமிழர் பேரவை மாநில நிர்வாகி கொலை வழக்கு: ஒருவர் கைது
மது குடிப்பதில் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் ரவியை விறகு கட்டையால் அடித்துக் கொன்றதாக நீலகண்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்.கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அருந்ததமிழர் பேரவை மாநில நிர்வாகி ஆவார். இவர் கடந்த ஐந்தாம் தேதி வீட்டின் அருகே உள்ள மதுரை வீரன் கோவில் அருகே படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் இது தொடர்பாக 4 -தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த நீலகண்டன் ரவியை அருகிலிருந்த விறகு கட்டையால் அடித்து கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நீலகண்டன் நாமக்கல் சிறைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டார். கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தற்பொழுது குற்றவாளி பிடிபட்டுள்ளது பள்ளிபாளையம் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.