குமாரபாளையத்தில் நேரடி நெல் விதைப்பு செயல்முறை விளக்க முகாம்..!
குமாரபாளையம் அருகே சீராம்பாளையம் பகுதியில் நேரடி நெல் விதைப்பு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.;
குமாரபாளையத்தில் நேரடி நெல் விதைப்பு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.
குமாரபாளையம் அருகே சீராம்பாளையம் பகுதியில் நேரடி நெல் விதைப்பு செயல்முறை விளக்க முகாம் வேளாண்மைத்துறை சார்பில், வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமையில் நடந்தது.
அந்த முகாமில் வேளாண்மை அலுவலர் மாயஜோதி பேசியதாவது:
இந்த நேரடி நெல் விதைப்பு மூலம், ஆள் பற்றாக்குறை போக்குதல், அதிக கூலி கொடுக்க வேண்டியது, நாற்றங்கால் விடுதல், நாற்றங்கால் பராமரிப்பு, நடவு பணி, பயிர் சாகுபடிக்கு குறுகிய நாட்கள், செலவு குறைவு என பல்வேறு நன்மைகள் உள்ளன. இதில் மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி ஆகிய நெல் ரகங்கள் பயிரிடப்படுகிறது. இங்குள்ள ரவி என்பவரது 1.15ஏக்கர் நிலத்தில் இந்த நெல் நடவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண்மைத்துறையில், பல உதவிகள் தமிழக அரசால் உழவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறேன் என்று வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி கேட்டுக்கொண்டார். இப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் இந்த செயல்முறை விளக்க முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர்.
சிறுதானிய உற்பத்தி விழிப்புணர்வு
பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை ,மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், உணவு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய பயிர்களின் சாகுபடி உற்பத்தியை அதிகரிக்கவும், ஊட்டமிகு சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள 17 கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமை வகித்தார். இதில் வரகு, தினை , சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்ய வலியுறுத்தப்பட்டது. சிறுதானிய விதைகள், நுன்னூட்டங்கள், உயிர் உரங்கள், இயற்கை பயிர் பாதுகாப்பு மருந்துகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தயார் நிலையில் இருப்பது குறித்து எடுத்து கூறப்பட்டது. வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.