குமாரபாளையம் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு; அபராதம் விதிப்பு
குமாரபாளையம் கடைகளில், ஆய்வு செய்து நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், குமாரபாளையம் நகராட்சி அதிகாரிகள், நகரில் உள்ள வணிக நிறுவங்களில் ஆய்வு செய்தனர். முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்களிடம் மூவாயிரம் ரூபாயும், விதி முறைகளை பின்பற்றாத 3 வணிக நிறுவனங்களில் ஆயிரத்து 500 ரூபாயும் என, மொத்தம் 4 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இது பற்றி நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், கொரோனா விதிமுறைகளை அரசு கூறியபடி அனைவரும் பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதுடன், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் அனைவரும் முகக் கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும். இந்த ஆய்வு தினமும் தொடரும் என்றார்.