காளியம்மன் கோவில் திருவிழா கடைகளில் அதிக வரி வசூல்: தடுத்து நிறுத்திய அதிகாரி
குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழா கடைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததையடுத்து அறநிலையத்துறை அதிகாரி நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது.;
குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட சிறுவர் ஊஞ்சல்கள், மற்றும் இதர நடைபாதை கடைகள்.
குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழா கடைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததையடுத்து அறநிலையத்துறை அதிகாரி நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது.
குமாரபாளையம் காளியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மகா குண்டம், தேர்த்திருவிழா, கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பில், திருவிழா நடக்கும் பகுதியில் கடைகள் வைக்கும் நபர்களிடம் வரி வசூல் செய்ய ஏலம் அறிவிக்கப்பட்டது. இதனை ஏலம் எடுத்தவர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பல மடங்கு அதிக தொகை கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட செயலர் சபரிநாதன் கூறுகையில், காளியம்மன் கோவில் திருவிழாவில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கைகளால் ஆட்டி விடப்படும் குழந்தைகள் தூரிகள், பாணி பூரி, தர்பூசணி பழக்கடைகள், உள்ளிட்ட நடைபாதை கடையினருக்கு பல ஆயிரம் ரூபாய் வரி கேட்டு ஏலம் எடுத்தவர் வற்புறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த வரிச்சுமை, ஆர்வத்துடன் ஊஞ்சல் ஆட வரும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் வசம் தான் திரும்ப பெறப்படும் நிலை உருவாகும். இதனை தடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது: இது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனே ஏலம் எடுத்த நபர் வசம் சொல்லி, இது போல் புகார் வராமல், நியாயமான வரி மட்டும் வசூல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.