புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டுமான பணி தடுத்து நிறுத்தம்
குமாரபாளையம் அருகே புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து நடந்து கொண்டிருந்த கட்டுமான பணியை அதிகாரிகள் தடுத்தனர்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி அருந்ததியர் தெரு பகுதியில் உள்ள புருஷோத்தம பெருமாள் கோவில் பின்புறம், அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இதனை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் அப்பகுதியை சேர்ந்த சிலர் அஸ்திவாரம் தோண்டி, கற்களை அடுக்கிக்கொண்டிருந்தனர். இது பற்றி தகவலறிந்த ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். இது பற்றி அவர்கள் கூறியதாவது:
சட்ட விரோதமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சில நாட்கள் முன்பு இதே இடத்தில் மரம் வெட்டிய நபர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. விசாரணை அறிக்கை தாசில்தார் மூலம் ஆர்.டி.ஒ. அலுவலகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை செய்து ஆர்.டி.ஒ. அபராத தொகையை நிர்ணயம் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த அபராதம் பணி நிலுவையில் இருக்கும் போதே, தற்போது அதே இடத்தில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அபராதம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு சட்டபூர்வ நடவடிக்கை விரைவில் எடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.