குமாரபாளையத்திற்கு இரவில் வராத பேருந்துகள்: பொதுமக்கள் கடும் அவதி
குமாரபாளையத்திற்கு இரவு நேரத்தில் பேருந்துகள் வரதாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.;
குமாரபாளையம் விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட பல தொழில்கள் மிகுந்த நகரம். பல்லாயிரம் தொழிலாளர்கள் தங்கள் வேலை முடிந்து தங்கள் வீடு நோக்கி செல்ல தொடங்குவது இரவு 8 மணிக்கு மேல்தான். ஆனால் குமாரபாளையம் முதல் சேலம் செல்லும் சில தனியார் மற்றும் அரசு பஸ்கள், சங்ககிரி வரை செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் பல நாட்களாக குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வருவதில்லை.
மழைக்காலம் என்பதால் இரவில் அதிக நபர்கள் வரமாட்டார்கள். அதனால் இரவு ட்ரிப் பஸ் வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நகராட்சி வரி கட்டணம் பாதிப்பு, பஸ் ஸ்டாண்டில் கடை வைத்து, வாழ்ந்து வரும் கடையினர் வாழ்வாதாரம் பாதிப்பு, வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிப்பு, என பாதிப்புகள் இதனால் ஏற்பட்டு வருகிறது.
காலை நேரத்தில் வந்து கொண்டிருந்த குமாரபாளையம், கோவை பஸ் தற்போது வருவதில்லை என கூறப்படுகிறது. தினசரி பெருந்துறை, திருப்பூர், கோவை நகருக்கு வேலைக்கு செல்வோர் பெரும்பாலோர் இருக்கையில் அவர்கள் எல்லாம் தற்போது தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
பவானியில் இருந்து சேலம், ஆத்தூர், திருச்செங்கோடு, நாமக்கல் செல்லும் போது குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்து பயணிகளை ஏற்றிச்செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் திரும்பி பவானி செல்லும் போது குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வராமல், பள்ளிபாளையம் பிரிவு சாலைவழியாக சென்று விடுகின்றனர்.
இதனால் பயணிகள் நீண்ட தூரம் நடந்து வர வேண்டியுள்ளது. பொதுமக்கள் துயர் போக்க இது போன்ற விதி மீறும் பஸ்கள் மீது மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.