போராட்டத்தில் சமூக இடைவெளி 'மிஸ்ஸிங்'... பொதுமக்கள் கவலை!
குமாரபாளையத்தில், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், சமூக இடைவெளி கடைபிடிக்காததால், தொற்று பரவும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகில், ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரேஷன் கார்டு உள்ளவர்கள் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுகிறார்கள். ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு அரசு அறிவித்த அனைத்து சலுகைகளும் பெற முடியவில்லை. அரசு அறிவிக்கும் அனைத்து சலுகைகளும் அந்த குடும்பங்களுக்கும் அரசு வழங்க வேண்டும் என்று, இதில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
அதேநேரத்தில், கொரோனா பரவலை தடுக்க தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. பெருந்தொற்று பரவும் அபாயம் உள்ள காலத்தில், தனிமனித இடைவெளியின்றி 40-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒன்றாகக்கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, சமூக ஆர்வலர்கள், பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்தது. இனிவரும் நாட்களில் இதுபோன்று நிகழாமல் இருக்க, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.