ஆர்டர் இல்லாததால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களுக்கு போதிய ஆர்டர் இல்லாததால் ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது.;

Update: 2023-07-18 11:00 GMT

குமாரபாளையத்தில் செயல்படாத விசைத்தறிகள். 

ஆர்டர் இல்லாததால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தப்பட்டுள்ளது. 

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உற்பத்தி செய்யபடும் ஜவுளி ரகங்களுக்கு போதிய ஆர்டர் இல்லாததால் ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இது குறித்து கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது:

குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதில் லுங்கி, கர்சீப், துண்டு, வேட்டி உள்ளிட்ட பல ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆடி மாத சமயத்தில் எந்தவொரு சுப நிகழ்வும் நடைபெறாது என்பதால், வியாபாரம் இல்லாத நிலை ஏற்படும். வட மாநிலங்களிலும் இதே நிலை என்பதால், இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களுக்கு ஆர்டர் இல்லாத நிலை ஏற்படும்.

தற்போது அந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செய்த ரகங்களுக்கு சில மாதங்களாக நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் போதிய விலை கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது ஆர்டரும் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் ஆடித்திருவிழா முடிந்த நிலையில், ஒரு வாரம் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்து, விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஜூலை 18 முதல் ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி வியாபாரம் ஆண்டு முழுவதும் ஆர்டர் கிடைத்திடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விடுமுறையால் சுமார் 5 ஆயிரம் விசைத்தரைகளில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள்.

Tags:    

Similar News