குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு…
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், குமாரபாளையம் அரசு மருத்துவமனையை மேம்படுத்துதல் சம்பந்தமாக பல்வேறு கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தேசிய தரச்சான்று குழுவினர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
தலைமை மருத்துவர் பாரதி தலைமையில் ஆய்வு நடைபெற்றது. மருத்துவர்கள் ராம் சுரேஷ் சவுராசியா, கிரீந்திரகுமார் நாத், சந்தோஷ்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனையின் பரப்பளவு, படுக்கை வசதிகள், டாக்டர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, மருந்து விநியோகம் மற்றும் இருப்பு, பதிவேடுகள் கையாளுதல், நாள் ஒன்றுக்கு வரும் வெளி நோயாளிகள், சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள், தண்ணீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி, பிரேத கூடம், அறுவை சிகிச்சை அரங்கின் வசதிகள், கழிப்பிட வசதி, உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து மத்திய மருத்துவக் குழு ஆண்டுதோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். இந்த ஆய்வின்போது, மருத்துவமனையின் உள் கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை முறைகள் குறித்து மத்திய மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொள்வர்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள், பெண்கள் சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, தொற்றுநோய்ப் பிரிவு, நெஞ்சக நோய்ப் பிரிவு, பிரசவ வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சிசு பராமரிப்புப் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், பிரசவ அறுவைச் சிகிச்சை அரங்கம், கண் நோய்ப் பிரிவு, மருந்தகம், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், ரத்த வங்கி, மருந்தகம் போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு துறையின் செயல் பாடுகளையும் மதிப்பிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். 70 மதிப்பெண்கள் பெற்றால் அந்த மருத்துவமனைக்கு தேசியத் தர உறுதிச் சான்று வழங்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.