சபரிமலையில் 20 நிமிடத்தில் இருவரின் உயிர்களை மீட்ட நாமக்கல் மாணவர்கள்
சபரிமலையில் நாமக்கல் மாவட்ட ஐயப்ப சேவா சங்க மாணவர்கள் 20 நிமிடத்தில் பக்தர்கள் இருவரின் உயிர்களை காப்பாற்றினர்.;
ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் தை மாத பிறப்பு வரை, கேரள மாநிலம் சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
மகர விளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அகில பரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அனுப்பி வைப்பது வழக்கம்.
குமாரபாளையம் ஐயப்பன் கோவிலில் இருந்து சபரிமலை சேவைக்கு, பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி மாணவர்கள் 75 பேர் 4ம் கட்டமாக சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த மணிகண்டன், 48, கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரகாஸ், 40, ஆகிய இருவரும் அப்பாச்சி மேடு பகுதியில் மூர்ச்சையானதால், இவர்கள் இருவரையும் கந்தசாமி கண்டர் கல்லூரி மாணவர்கள் ஸ்ட்ரெட்சர் மூலம் பம்பைக்கு 20 நிமிடத்தில் கொண்டு வந்து சேர்த்ததால் அவர்கள் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர்.
இருவரை தவிர, மேலும் 11 நபர்களை பல்வேறு உடல்நலக்குறைவு காரணமாக ஸ்ட்ரெட்சர் மூலம் பம்பை மருத்துவ முகாமிற்கு அழைத்து வந்து சிகிச்சை செய்ய உதவினர். இவர்களை முகாம் அலுவலர் செந்தில், மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட செயலர் ஜெகதீஸ், உள்ளிட்ட பலர் பாராட்டினார்கள். அகில பாரத ஐயா சேவா சங்கத்தாரின் 30ம் ஆண்டு சேவைப்பணியில் கந்தசாமி கண்டர் கல்லூரி மாணவர்கள் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முகாமில் சூர்யா, பூபதி, லோகேஸ், கிரி, கிஷோர், கதிர், மதிவிஷ்ணு, சேது, முகில், ஜெயசூர்யா, விக்னேஷ், மதன் உள்ளிட்டவர்கள் இந்த ஸ்ட்ரெட்சர் பணியில் சபரிமலையில் ஈடுபட்டனர்.