திடக்கழிவுகள் சேகரிக்க புதிய வாகனங்கள் : நகராட்சி தலைவர் துவக்கி வைப்பு..!
குமாரபாளையம் நகராட்சியில் திடக்கழிவுகளை சேகரிக்க நான்கு வாகனங்களை நகராட்சி தலைவர் துவக்கி வைத்தார்.;
குமாரபாளையம் நகராட்சியில் திடக்கழிவுகளை சேகரிக்க நான்கு வாகனங்களை நகராட்சி தலைவர் துவக்கி வைத்தார்.
குமாரபாளையம் நகராட்சியில் திடக்கழிவுகளை சேகரிக்க நான்கு வாகனங்களை நகராட்சி தலைவர் துவக்கி வைத்தார்.
குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் திடக்கழிவுகள், மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்கள் வாங்கி வருகிறார்கள். குப்பைகளை அகற்ற போதிய வாகனங்கள் இல்லாததால், குப்பை அகற்றுவது சம்பந்தமாக நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல புகார்கள் கூறி வந்தனர்.
இதனால் புதியதாக திடக்கழிவுகள் சேகரிக்க நான்கு வாகனங்கள் வாங்கப்பட்டன. இவைகளை நேற்று நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆணையாளர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் வள்ளியம்மாள், சுகாதார ஆய்வாளர்கள் சந்தானகிருஷ்ணன், ஜான் ராஜா, உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நகர்மன்ற கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் நகராட்சி, நகர்மன்ற அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:
கோவிந்தராஜ், ஜேம்ஸ், வேல்முருகன், பரிமளம், புஷ்பா, கதிரவன், உள்ளிட்ட பலரும் கூறியதாவது:
எங்கள் வார்டில் குப்பைகள் அகற்றுவதில்லை. வடிகால் சுத்தம் செய்வது இல்லை. சுகாதார அதிகாரிகளை கேட்டால், வருவார்கள் என்று அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். குப்பைகள் அள்ளி செல்ல வண்டிகள் வருவது இல்லை. பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அதிகாரியை கேட்டால் ஆட்கள் இல்லை என்கிறார்கள். ஆட்களை கேட்டால் குப்பை வண்டி இல்லை என்கிறார்கள். இவ்வாறு கூறினார்கள்.
விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர்): இன்னும் 10 நாட்களில் இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தப்படும்.
பழனிசாமி: (அ.தி.மு.க.):
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால் நிலங்களை கேட்டு பெற்றுக்கொண்டால், அதில் வடிகால் உள்ளிட்ட கட்டுமான பணிகள் செய்யலாம். நகர்புற பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் விடப்போவதும் இல்லை. கொமாரபாளையம் என்பதை குமாரபாளையம் என மாற்ற ஏற்பாடுகள் செய்யுங்கள். நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கூட தரலாம்.
ஆணையர் (பொ) ராஜேந்திரன் :
பழைய ஆவணங்கள் நமது நகராட்சியில் இல்லை. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேடி பார்க்க சொல்லியுள்ளேன்.
வெங்கடேசன் (தி.மு.க. நகராட்சி துணை தலைவர்):
அம்மன் நகர் பகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் வடிகால், போதுமானதாக இல்லை. அதை இன்னும் அகலப்படுத்த வேண்டும்.
பாலசுப்ரமணி (அ.தி.மு.க.) :
குமாரபாளையம் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி காய்கறி மார்க்கெட் நீண்ட வருடங்கள் இருக்க வேண்டிய கட்டிடம். அதனை தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்கெட்டிற்குள் கழிப்பிடம் உள்ளது. இதன் வாசலை வெளிப்புறமாக மாற்றி அமைக்க வேண்டும். வியாபாரிகளுக்கு சங்கடமாகவும், அதே நேரம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடும்.
மார்க்கெட்டில் உள்ள கடைகளை அதிகப்படுத்தி, தற்போது உள்ள வியாபாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி ஆட்கள் புதிதாக வந்தால் அதிருப்தி ஏற்படும். தூய்மைப் பணியாளர்களை அனுசரித்து வேலை செய்யச் சொல்லுங்கள். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சில தனியார் கார்களை நிறுத்திக்கொண்டு இரவில் மது அருந்துகிறார்கள். திறந்த வெளி பாராக பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. இதனை தடுக்க வேண்டும்.
தனலட்சுமி (அ.தி.மு.க.) :
சுகாதார பணிகள் செய்யாததால் வார்டுக்குள் போக முடிவது இல்லை. அதிக ஆட்களை நியமித்து தூய்மை பணி தினமும் செய்ய வேண்டும்.
தர்மராஜ் (தி.மு.க.):
நகராட்சி சார்பில் குப்பை வரி வாங்கப்படுகிறது. ஆனால் குப்பை அகற்றப்படுவது இல்லை. பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள்? என்ன பதில் சொல்வது?
வேல்முருகன் (சுயேட்சை): வீட்டுவரி வசூல் செய்ய வரும் நபர் மீது பல புகார்கள் வருகிறது. அவரை மாற்ற வேண்டும். சின்னப்பநாயக்கன்பாளையம் பள்ளியில் வகுப்பறைகள் போதுமானதாக இல்லை. அதிக வகுப்பறைகள் கட்ட வேண்டும்.
சத்தியசீலன் (தி.மு.க.):
நகராட்சியில் உள்ள நிரந்தர தூய்மை பணியாளர்கள், தனியார் சார்பில் பணியாற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு, யாருக்கு என்னென்ன வேலை என்பதை சொல்லி வார்டுக்குள் அனுப்புங்கள். எந்த வேலை சொன்னாலும் அதற்கு வேறு ஆள் வருவார்கள் என்கிறார்கள்.
பரிமளம் (தி.மு.க.):
எங்கள் வார்டில் காலை 09:00 மணிக்கு மேல்தான் குடிநீர் வருகிறது. வேலைக்கு செல்வோர் எப்படி தண்ணீர் பிடிப்பார்கள்? நேரமாக தண்ணீர் விட நடவடிக்கை தேவை. இவ்வாறு விவாதங்கள் நடந்தன.