ஜவுளி ஏற்றுமதிக்கு உறுதுணையாகும் நவீன விசைத்தறிகள்..!

குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறிகள் நவீனமயமாகி வருவதால் அவைகள் ஜவுளி ஏற்றுமதிக்கு உறுதுணையாக விளங்குகின்றன. (சிறப்புக் கட்டுரை)

Update: 2023-10-20 04:40 GMT

குமாரபாளையம் நகரில் செயல்பட்டு வரும் நவீன விசைத்தறிகள்.

 சிறப்புக் கட்டுரை

இந்திய அளவில் ஜவுளி ஏற்றுமதிக்கு நவீன விசைத்தறிகள் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. உணவு, உடை, உறைவிடம் என்பதன்படி இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து ஜவுளித்தொழில் மிகவும் இன்றியமையாதது. இலை, தளைகளை ஆடையாக அணிந்த மனிதன், கால வளர்ச்சியில்  கைத்தறியை உருவாக்கி, பருத்தியின் மூலம் நூலெடுத்து ஆடைகளை உற்பத்தி செய்யத்  தொடங்கினான். இந்தியாவின் அரசு கட்டமைப்பு உருவான நாள் முதலாக ஜவுளி உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, இதன் முன்னேற்றத்திற்கு பெரிதும் அரசும் உதவி வருகிறது.

இது பற்றி ஜவுளி உற்பத்தியாளர் பழனிவேல் கூறியதாவது:

தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப முதலில் கைத்தறிக்கு அடுத்து சாதா விசைத்தறி மூலம் ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டது. கைத்தறியை விட வேகமாக ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக ட்ராப் பாக்ஸ் விசைத்தறிகள் வந்தது. இந்த வகை தறிகளில் 2,3,4 நாடாக்கள் பயன்படுத்தப்பட்டது.

இதில் ஓவர் பிக், அண்டர் பிக் என்ற வகையில் துணியின் திடம் பல வகைகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஓவர் பிக் வகை தறிகளில் நூல் உறுதி தன்மை வகையில் 20, 30,40 -ம் நெம்பர் நூல்களில் துண்டுகள், வேட்டிகள், லுங்கிகள், போர்வைகள், ஸ்கிரீன்கள் உள்ளிட்ட ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டன.

அண்டர் பிக் தறிகளில் இளம்பிள்ளை ரகம் எனப்படும் சில்க் ரக சேலைகள், சுடிதார்கள், உள்ளிட்ட ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இவைகள் 10,20, எனும் அளவில் விசைத்தறிகள் அமைக்கப்பட்டு சிறிய தொழிற்கூடங்கள் அதிக அளவில் பெருகியது. தற்போதைய நிலையில் இந்த தறிகளை ஒட்ட ஆட்கள் விருப்பம் கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.

கூலி குறைவே இதன் காரணம். இதனால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஈரோடு, சோமனூர், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி ரகங்களை 10,12 தறிகளை ஒரே ஆள் ஓட்டும் வகையில் உள்ளது. 8 மணி நேர வேலையில் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் நிலை உள்ளது. இந்த ரகங்களுக்கு வியாபாரம் இல்லாத நிலையும், அடப்பு கூலியும் குறைவாக தரப்படுகிறது. ஆகவே இந்த தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது.

இதற்கு மாற்றாக, சைனா ரேப்பியர் தறிகள், சோமா பிக்கனால், ஏர்ஜெட், போன்ற நவீன விசைத்தறிகள் களமிறங்கியுள்ளன. சாதா தறி ரகங்கள் நவீன தறிகளில் உற்பத்தி செய்ய முடியாது. சாதா மற்றும் ட்ராப் பாக்ஸ் தறி ஜவுளியில் ஜமுல் இருக்கும். ஆனால் நவீன தறியில் ஜமுல் இருக்காது என்பதுடன் ஜமுல் வர வாய்ப்பும் இல்லை.

நிபுணர்கள்  இதற்கான முயற்சி செய்து வருகிறார்கள். நவீன தறிகளில் அதற்குண்டான ரகங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். சாதா தறி ஜவுளிக்கும், நவீன தறி ஜவுளிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. டிராப் பாக்ஸ் தறிகள் 1.25 லட்சம் முதல் 2.00 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் வகை நவீன தறிகள் 6 லட்சம், 12 லட்சம், 35 லட்சம் மற்றும் அதற்கு மேலும் விற்கப்படுகிறது. சாதா தறிகளில் ஜவுளி உற்பத்தி ஒரு நிமிடத்திற்கு 104 இழைகள் பின்னலிடும். 8 மணி நேரம் கொண்ட ஒரு சிப்டுக்கு ஒரு தறிக்கு 20 மீட்டர் துணி உற்பத்தி செய்ய முடியும். சோமா பிக்கனால் நவீன தறியில் ஒரு நிமிடத்திற்கு 340 இழைகளும், ஏர்ஜெட் தறிகளில் ஒரு நிமிடத்திற்கு 600 முதல் 1500 இழைகள் வரை பின்னலிட்டு, ஒரு சிப்டுக்கு ஒரு தறிக்கு 150 மீட்டருக்கும் மேல் ஜவுளி உற்பத்தி செய்ய முடியும்

கைத்தறிகளுக்கு அரசு தரப்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு இன்றும் அந்த தொழில் காப்பாற்றப்பட்டு வருகிறது. அது போல் சாதா மற்றும் டிராப் பாக்ஸ் வகை தறிகளுக்கும் அரசு உதவினால் இந்த தொழில் பாதுகாக்கப்படும். சிட்ரா போன்ற அரசுத்துறை அமைப்புகளின் சார்பில் சாதா தறி, டிராப் பாக்ஸ் தறி, நவீன தறிகள் ஓட்ட தொழிலாளர்களுக்கு அதிக அளவில் இலவச பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

சாதா, டிராப் பாக்ஸ் மற்றும் நவீன தறிகளில் உற்பத்தி செய்யப்படும் ரகங்களை சந்தைப்படுத்ததுதலை அரசே நிர்வகிக்க வேண்டும். நவீன தறிகளை தற்போது வட மாநில இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டி வருகிறார்கள். தமிழக தொழிளார்களுக்கு போதிய பயிற்சி கொடுத்து, ஜவுளி உற்பத்தி அதிகப்படுத்த அரசு உதவ வேண்டும். இந்தியா அளவில் ஜவுளி ஏற்றுமதி அதிக அளவில் நடைபெற்று, அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் வகையில் நவீன விசைத்தறிகள் மிகவும் உதவி வருகின்றன, என்றார்.

Tags:    

Similar News