குமாரபாளையத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்: முதல்வருக்கு மநீம கட்சி மனு

குமாரபாளையத்தில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கக்கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.;

Update: 2021-12-22 13:00 GMT

குமாரபாளையத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என,  மக்கள் நீதி மய்யம் சார்பில், மகளிரணி நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளனர். இது தொடர்பான மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது:

குமாரபாளையத்தில்,  1000க்கும் மேற்பட்ட விசைத்தறி, கைத்தறிக்கூடங்கள், 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள், ஏராளமான ஸ்பின்னிங் மில்கள், 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன. பணி புரியும் சில இடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள், ஆசிரியரின்  தகாத செயல், குடிபோதையில் கணவன் தகராறு, பெண்ணிடம் செயின் பறிப்பு, நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் அத்துமீறல், கட்டுமான நிறுவனத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, பஸ் ஸ்டாண்டில் மாணவிகளை கிண்டல் செய்யும் ரவுடிகள் என பல்வேறு வகையில் பெண்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

சில நாட்கள் முன்பு,  கூட வெப்படை பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பெண்ணை கூட்டு பலத்காரம் செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில்,  தாலுகா அந்தஸ்து பெற்ற குமாரபாளையத்தில்,  மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். தற்போது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால் திருச்செங்கோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றாக வேண்டியுள்ளது.  இதனால் கால விரயம், பொருள் விரயம் ஏற்படுகிறது.  வருமான இழப்பும் ஏற்படுகிறது. எனவே குமாரபாளையத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் சார்பில், மகளிரணி செயலர் சித்ரா, நிர்வாகிகள் ரேவதி, உஷா, கிருத்திகா, சுஜாதா உள்ளிட்ட பலர் , மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி, திருச்செங்கோடு டி.எஸ்.பி., திருச்செங்கோடு ஆர்.டி.ஒ., குமாரபாளையம் தாசில்தார் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளனர். 

Tags:    

Similar News