தடுப்பூசி போட்டால் பரிசு வெல்ல வாய்ப்பு: குமாரபாளையம்வாசிகளே ரெடியா
குமாரபாளையத்தில், தடுப்பூசி செலுத்தினால் பித்தளை, எவர்சில்வர் பாத்திரங்கள் குலுக்கல் முறையில் பரிசாக பெறலாம் என, நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.;
குமாரபாளையத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில், பித்தளை, எவர்சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும் என்று, நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: அக்டோபர்.30ல் குமாரபாளையம் நகரில் சத்துணவு மையங்கள், நகராட்சி பள்ளிகள் மற்றும் நடமாடும் நான்கு வாகனங்கள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பயனாளிகளுக்கு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பித்தளை, எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்படும். அனைவரும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, கொரோனா இல்லாத குமாரபாளையம் நகராட்சியாக உருவாக்கிட, முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன்.
குமாரபாளையத்தில் அக். 30ல் கொரோனா தடுப்பூசி முகாம் 18 மையங்களிலும், 3 நடமாடும் வாகனங்களிலும் முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுனர்கள், டூரிஸ்ட் கார் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், டெம்போ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், இதர வாகன ஓட்டுனர்கள், நகரில் உள்ள அனைத்து வணிக நிறுவன, அனைத்து விசைத்தறி நிறுவன, இதர நிறுவன உரிமையாளர்கள், பணியாளர்கள், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை 100 சதவீதத்தை அடைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.