குமாரபாளையத்தில் தியாகிகள் கல்வெட்டில் போஸ்டர்: அதிருப்தியில் வாரிசுகள்
குமாரபாளையத்தில் தியாகிகள் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டுவதால் வாரிசுகள் அதிருப்தியடைந்துள்ளனர்.;
குமாரபாளையத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சங்கம் உள்ளது. இதன் சார்பாக பஸ் ஸ்டாண்டில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் மீது அடிக்கடி சில நபர்கள் போஸ்டர், நோட்டீஸ் ஆகியவைகளை ஒட்டு விடுகிறார்கள்.
கல்வெட்டு அமைப்பாளர்களும் நேரில் வந்து அதனை தண்ணீர் ஊற்றி கிழித்து வருகிறார்கள். சில நாட்களில் வேறு சில நபர்கள் போஸ்டர் ஒட்டி விடுகிறார்கள். இது அவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி சங்க நிர்வாகிகள் விஸ்வநாதன், பன்னீர்செல்வம் கூறுகையில், இந்த கல்வெட்டை மதிக்க தெரியாவிட்டாலும் பரவாயில்லை. போஸ்டர் ஒட்டி அவமரியாதை செய்யலாமா? கல்வெட்டு பொலிவில்லாமல் இருப்பதால் இப்படி நடந்து கொள்கிறார்கள்.
எனவே கல்வெட்டை புதுப்பித்தல் பணியை செய்துள்ளோம். இனிமேலாவது இந்த கல்வெட்டின் மீது போஸ்டர் ஒட்டாமல் இருந்தால் சரி. தியாகிகளின் வாரிசு சார்பில் மாநில அளவிலான ஒரு அமைப்பை உருவாக்கி வருகிறோம். மார்ச் 6ல் எங்கள் சங்கம் சார்பில் மதுரையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என தெரிவித்தனர்.