அனுமதியின்றி இயங்கிய விசைத்தறி கூடம்... பூட்டு போட்ட பள்ளிபாளையம் நகராட்சி!
ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட விசைத்தறிக் கூடத்திற்கு, பள்ளிப்பாளையம் நகராட்சி நிர்வாகம் பூட்டு போட்டது.;
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு ஊரடங்கை விதித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. விசைத்தறி கூடங்கள் இயக்குவதற்கு, நகராட்சி நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், பள்ளிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் அருகே விதிமுறைகளை மீறி ஒரு சில விசைத்தறி கூடங்கள் நகராட்சி பகுதியில் இயங்கி வருவதாக தகவல் வந்தது. அங்கு விரைந்த நகராட்சி ஆணையாளர் விதிமுறைகளை மீறி விசைத்தறிகள் இயங்குவதை கண்டறிந்தார்.
சம்பந்தப்பட்ட விசைத்தறி கூடம் உடனடியாக தறிகள் இயக்குவது நிறுத்தப்பட்டு கூடத்திற்கு பூட்டு போடப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாக உத்தரவை மீறி விசைத்தறிக் கூடங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக கூடங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.