குமாரபாளையம்: திமுகவில் 33 வார்டுகளுக்கு 56 பேர் விண்ணப்பம்
குமாரபாளையம் நகர்மன்ற வார்டுக்கு , 33 வார்டுகளில் திமுகவில் 56 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி அறிவுறுத்தல்படி, குமாரபாளையம் நகர்மன்ற வார்டுஉறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்களுக்கு, நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில், மாவட்ட பொருளாளர் குமார் பங்கேற்று, விருப்பமனு வழங்கினார்.
இதில், திமுகவினர் 10 ரூபாய் கொடுத்து மனுவினை பெற்றுக் கொள்ளலாம். நகரமன்ற உறுப்பினர் பதவிக்கான சுயவிபரங்களை நிரப்பிய பின், மனுவோடு 5 ஆயிரம் ரூபாய், பெண்கள் வார்டுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், நகர தி.மு.க. அலுவலகத்தில் நவ.22ம் தேதிக்குள் வழங்க வேண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்களில் இதுவரை 180 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
அதை பூர்த்தி செய்து திருநங்கை சபிதா, முன்னாள் கவுன்சிலர்கள், முன்னாள் அ.தி.மு.க. நகர்மன்ற துணை தலைவர் ராஜேந்திரன், வார்டு செயலர்கள் உள்பட 56 நபர்கள், விண்ணப்பங்கள் மற்றும் அதற்குரிய பணம் ஆகியவற்றை வழங்கினர்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட பொருளாளர் குமார் பெற்றுகொண்டார். நகர பொறுப்பாளர் செல்வம், முன்னாள் நகர செயலர் வெங்கடேசன், நிர்வாகிகள் அன்பரசு, அன்பழகன், ஒ.ஆர்.எஸ். எனப்படும் செல்வராஜ், விஜய்கண்ணன், ராஜ்குமார், மீனாட்சிசுந்தரம், ரவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
நகரமன்ற உறுப்பினர் பதவிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வழங்க இன்று, நவ. 22 மாலை 06:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அதிக நபர்கள் விண்ணப்பம் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.