செங்கமா முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் சுவாமி கண் திறப்பு வைபவம்..!
குமாரபாளையம் அருகே செங்கமா முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் சுவாமி கண் திறப்பு வைபவம் நடந்தது.;
குமாரபாளையம் அருகே செங்கமா முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் சுவாமி கண் திறப்பு வைபவம் நடந்தது.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் செங்கமா முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சுவாமிகளுக்கு கண் திறப்பு வைபவம் நடந்தது.
மலைப்பாளையம் விநாயகர் கோவிலிலிருந்து முளைப்பாரி அழைத்தல் வைபவம் நடந்தது. முதல் கால யாக சாலை பூஜை துவங்கிய நிலையில், இன்று, நாளை யாக சாலை பூஜைகள் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளன. டிச. 15 காலை 08:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
இன்று இரவு 07:00 மணியளவில் கோவில் வளாகத்தில் கிருபானந்த வாரியார் பிரதான சிஷ்யை தேச மங்கையர்க்கரசியின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழா, ஆன்மீக சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் பெருமளவில் வருகை தந்து சுவாமியின் அருள்பெற வேண்டி விழாக்குழுவினர் கேட்டுக்கொள்கிறார்கள்.
கும்பாபிஷேகம் என்பது ஏன் செய்யப்படுகிறது?
இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. அது எப்போது முழுமை பெறும்? ஆலயத்தில், 'கும்பாபிஷேகம்' நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது.
கும்பம் என்றால் 'நிறைத்தல்' என்று பொருள். நம் ஆலயங்களில் வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்கள் மூலம் இறைசக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம். இதனை சைவர்கள் 'மகா கும்பாபிஷேகம்' என்றும் வைணவர்கள் 'மகா சம்ப்ரோக்ஷணம்' என்றும் அழைக்கிறார்கள்.
மேலும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் யாகங்கள் செய்யப்பட்ட தீர்த்தங்களால் இறைவன் மீதும், கோபுரக் கலசங்கள் மீதும் புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் மூலமாகவே விக்கிரகங்கள் தெய்வசக்தியைப் பெறுகின்றன.
பெரும்பாலும், கும்பாபிஷேகமானது 12 வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. இதன் காரணம், நாம் கும்பாபிஷேகம் செய்யும் போது சாத்தப்பட்ட அஷ்டபந்தனமானது (மருந்து) 12 வருடங்கள் வரைதான் சக்தியோடு இருக்கும். மேலும் கோயில்களில் ஏதேனும் புனரமைப்பு செய்தாலும் கும்பாபிஷேகம் செய்யப்படும்.