குமாரபாளையத்தில் உலக சாதனை சிலம்பாட்டம்..102 மாணவ, மாணவிகள் பங்கேற்பு...

உலக சாதனை நிகழ்வாக குமாரபாளையத்தில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் 102 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.;

Update: 2023-01-17 05:09 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற உலக சாதனை சிலம்பாட்ட நிகழ்வில் 102 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தமிழர்களின் வீர விளையாட்டு மற்றும் சிறந்த தற்காப்பு கலையாக சிலம்பாட்டம் கருதப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் சிலம்பாட்டம் பயிற்சி பெற சிறுவர், சிறுமியர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சிலம்பாட்ட நிகழ்ச்சியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மூன்று மணி நேர சிலம்பாட்ட நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 102 மாணவ, மாணவியர் பங்கேற்று தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர். சிலம்பாட்ட ஆசிரியர் மோகன்குமார் தலைமை வகித்தார். விடியல் பிரகாஷ், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் பங்கேற்று சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தனர். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொது செயலர் வழக்கறிஞர் சரவணராஜன், குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன், திமுக நகர செயலாளர் செல்வம், இந்திய முதல் பெண் டாக்ஸி ஓட்டுநர் செல்வி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சி குறித்து சிலம்பம் பயிற்சியாளர் மோகன்குமார் கூறியதாவது:

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.

சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பினால் தொடுதல் போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும்.

நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இந்தக் கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு இன்றும் நடைமுறையில் உள்ளது என பயிற்சியாளர் மோகன்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News