சேர்மன் விஜய் கண்ணன் தலைமையில் குமாரபாளையம் நகர்மன்ற கூட்டம்
குமாரபாளையம் நகர்மன்ற கூட்டம் சேர்மன் விஜய் கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.;
குமாரபாளையம் நகரமன்ற சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. பெண் கவுன்சிலர்கள் தங்களுக்கு கூட்ட அரங்கத்தின் முன் பகுதியில் இருக்கைகள் ஒதுக்கி தர கேட்டு மனு கொடுத்ததின் படி, பெண்கள் முன்பகுதியில் அமர்ந்தனர். அதன் பின் வந்த துணை சேர்மன் வெங்கடேசன் தனக்காக முன் வரிசையில் போடப்பட்ட இருக்கையில், பெண் கவுன்சிலர்கள் உட்கார்ந்து இருந்ததால், பத்திரிகையாளர்களுக்காக போடப்பட்டிருந்த சேர் ஒன்றை எடுத்து, சேர்மன் அமர்ந்திருந்த மேடை மீது, சேர்மன் இருக்கை அருகே துணை சேர்மன் அமர்ந்தார்.
துணை சேர்மன் இருக்கையில் உட்கார்ந்திருந்த சுயேச்சை கவுன்சிலர் கனகலட்சுமி உங்கள் இருக்கையில் அமர்ந்தது தவறாக இருந்தால் மன்னியுங்கள் என்று கூற, தவறேதும் இல்லை என்று துணை சேர்மன் வெங்கடேசன் கூற கூட்டம் துவங்கும் முன்பே களை கட்டியது. கடந்த கூட்டங்களில் எதிர்க்கட்சி தலைவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்க வேண்டும் என அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
பாலசுப்ரமணி (அ.தி.மு.க.): ஏலம் நடந்த போது நாளிதழ்களில் விளம்பரம் தரப்பட்டதா? ஏலம் குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் தரப்படுவதில்லை. எங்கள் வார்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மனுக்கள் பொறியாளரிடம் கொடுக்கப்பட்டது. அது குறித்து நகரமன்ற கூட்ட தீர்மானங்களில் பணிகள் குறித்து குறிப்பிடப்படவில்லை. பொறியாளரிடம் கேட்டால் நான் கொடுத்த மனுக்கள் காணவில்லை என்கிறார். எங்கள் மனுவிற்கே இந்த நிலை என்றால் பொதுமக்கள் கொடுக்கும் மனுவின் நிலை என்ன ஆகும்? இதனை கண்டித்து எங்கள் வார்டு பொதுமக்களை ஒன்று திரட்டி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும். டூவீலர் மானியம் தரும் அரசு விழாவிற்கு முறைப்படி கவுன்சிலர்களை அழைக்கவில்லை.
புருஷோத்தமன் (அ.தி.மு.க.) நகராட்சியில் அரசு விழா நடக்கும் போது எங்களுக்கு அழைப்பு இல்லை என்று சொல்வது எங்களுக்கு அவமரியாதையாக உள்ளது.
தர்மராஜ் (தி.மு.க)-அம்மன் நகர் சாலை பணிகள் எந்த அளவில் உள்ளது? மேலும் காலம் கடத்தினால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள். ஆக்கிரமிப்பு அகற்றி பலனில்லை.
ராஜேந்திரன் (பொறியாளர்): ஆவணங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் உத்தரவு வந்துவிடும்.
பழனிசாமி (அ.தி.மு.க): -அம்மன் நகர் சாலை மிகவும் காலதாமதம் ஆகி வருகிறது. பொதுப்பணித்துறை இடத்தை நகராட்சி இடத்துடன் சேர்த்து விடலாம். அங்கு வாய்க்கால் இருப்பதால், யாரும் விவசாயம் செய்யப்போவதில்லை.
சத்தியசீலன் (தி.மு.க)-கத்தேரி பிரிவு முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை மின் கம்பங்கள் சாலை நடுவில் உள்ளன. விளம்பர போர்டுகள் அகற்றியும், வியாபார நிறுவனத்தார் மீண்டும் போர்டு வைத்து ஆக்கிரமித்துள்ளனர். நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
பரிமளம் (தி.மு.க.), தீபா (தி.மு.க.), கோவிந்தராஜ் (தி.மு.க.) ராஜ் (தி.மு.க.), அம்பிகா (தி.மு.க.) ஆகியோர் வடிகால், கழிப்பிடம், சாலை வசதி குறித்து கேட்டனர்.
வேல்முருகன் (சுயேச்சை): சாலை மத்தியில் உள்ள மின் கம்பம் அகற்ற வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து பேசினர்.
இவற்றிற்கு பதில் அளித்து சேர்மன் விஜய்கண்ணன் பேசும்போது
அரசு விழா நடத்தும் போது எல்லா கவுன்சிலர்களுக்கும் தகவல் கொடுத்து நடத்த வேண்டும் என்று வழிகாட்டுதல் இருந்தால் சொல்லுங்கள். அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி பணிகள் செய்து கொடுக்கப்படும். இருக்கை பிரச்சனை அடுத்த கூட்டத்திற்குள் முடிவு செய்து கொள்ளலாம். சானார்பாளையம் குப்பை கிடங்கிற்கு செல்ல வழித்தடம் தற்காலிக அனுமதி கொடுத்த எஸ்.எஸ்.எம். இளங்கோவிற்கு நகராட்சி சார்பில் நன்றிகள். இனி அனைத்து விழாவிற்கும் அனைத்து கவுன்சிலர்களுக்கும் தகவல் கொடுக்கப்படும். நாய்களுக்கு கருத்தடை செய்ய நாய் ஒன்றுக்கு 700 ரூபாய் ஆகிறது. இது பற்றி பரிசீலனை செய்து நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படும் என்றார்.