குமாரபாளையத்தில் உரிமம் இல்லாத இறைச்சி கடைகளுக்கு அபராதம்: அதிகாரிகள்
குமாரபாளையத்தில், உரிமம் இல்லாத இறைச்சிக்கடை நடத்தினால், அபராதம் விதிக்கப்படும் என்று, நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.;
குமாரபாளையத்தில், உரிமம் இல்லாத இறைச்சி கடையினர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: குமாரபாளையம் ஆட்டிறைச்சி கடையினர் தங்கள் ஆடுகளை ஆடு வதை கூடத்தில் மட்டுமே வதை செய்து, முத்திரையிட்டு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி முத்திரையிடப்பட்டு விற்பனை செய்யபடுகிறதா? என ஆட்டிறைச்சி கடைகளில் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இதில், உரிமம் இல்லாமல் பல கடைகள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் அனைத்து இறைச்சி கடையினரும் நகராட்சி அலுவலகத்தில் உரிமம் பெற்றுதான் கடைகள் நடத்த வேண்டும். அவ்வாறு உரிமம் இல்லாமல் கடை நடத்தியது தெரியவந்தால் அபராதம், சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குமாரபாளையத்தில் 62 ஆட்டிறைச்சி கடைகள், 55 கோழிக்கடைகள், 21 மீன் கடைகள் உள்ளன. 62 ஆட்டிறைச்சி கடையினர் சார்பில், ஆடுகள் வதைகூடத்தில் 252 ஆடுகள் வதை செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.